கக்கன், இவர் விடுதலைப்போராட்ட வீரர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழு கமிட்டி தலைவர். இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 ஆம் ஆண்டு முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்தவரும், தலை சிறந்த அரசியல்வாதியும் ஆவார். மதுரை மாவட்டம் தும்பப்பட்டியில் பிறந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவத்சலம் அமைச்சரவையில் பார்த்து ஆண்டுகள் பணியாற்றியவர். 5 ஆண்டுகள் லோக் சபா உறுப்பினராக இருந்தார் என்றாலும் குடியிருக்க வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தார்.
அரசு பேருந்தில் பயணம் செய்தார், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது கடைசிக் காலம் கழிந்தது. பொது வாழ்வில் தூய்மையும், நேர்மையும், செயல்திறனும் கொண்டு அரசுப் பணியை மக்கள் பணியாக நேர்த்தியாக செய்தவர். அமைச்சர் ஆனதும் மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஒரு ஆசிரியர் பள்ளியை நிறுவ முதல் உத்தரவை பிறப்பித்தார். மதுரையின் பெருமைகளில் ஒன்றான விவசாயக் கல்லூரி அமையக் காரணமானவர். ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்திற்கு உதாரணமாக திகழ்ந்த கக்கன், இன்று நம் கனவு அரசியல்வாதி. மக்கள் சேவைக்கு வருபவர்கள் இவர் போல் இருக்க மாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி உள்ளது.
அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார் அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். எம்ஜிஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரை கண்டு கலங்கினார். நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் கேட்டுக் கொள்ள, நீங்கள் பார்க்க வந்ததே போதும் என்று இயல்பாக மறுத்தார். கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப் போனார். சொத்தே இல்லாமல் நாட்டுக்கு சொத்தாகி போனவர் கக்கன்.