மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம் :
மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தை நாடி தீர்ப்பை பெற்று கொள்ளுமாறு கூறியது. இதனையடுத்து திமுக, அதிமுக மற்றும் பாமகவினர் மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்தனர். திமுக வழக்கறிஞர் வில்சன், பாமகவின் அன்புமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலுவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தனர். இடஒதுக்கீடை அமல்படுத்தாமல் கவுன்சிலிங் நடத்த கூடாது எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை என்றும் கூறியது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரியது. இதனையடுத்து மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.