தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் வருகின்ற 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதில் இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 25,344ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.