அரபு நாடுகளில் சிக்கிய தமிழர்கள் மரணமடைந்த பிறகு தான் தாய்நாட்டிற்கு திரும்புவோமா என்ற வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரபு நாடுகளான குவைத், துபாய், கத்தார் போன்ற நாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடனடியாக தங்களை வெளியுறவுத்துறை மூலம் அழைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நியூட்டன் என்ற இளைஞர் “நாங்கள் சுமார் ஆயிரம் தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம் எங்களுக்கு வேலை, ஊதியம், உணவு, தங்குமிடம் என எதுவும் இல்லை. இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வெளியுறவுத் துறை மூலமாக எங்களை தாய் நாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்.
இப்போது எங்களை அழைத்து வரவில்லை என்றால் மரணித்த பிறகு தான் தாய் நாட்டிற்கு திரும்புவோம் என்ற அச்சம் எங்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது” என உருக்கத்துடன் தெரிவித்திருந்தார். இதேபோன்று கத்தார் நாட்டில் ஒப்பந்தப் பணியில் 100 தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ளனர். இவர்களது வேலை மார்ச் 25-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கூறும்போது நாங்கள் மொத்தம் 45 பேர் கத்தார் வந்தோம். எங்கள் பணி முடிவடைந்து விட்டது. இப்போது தங்குமிடம், ஊதியம் என எதுவும் இல்லாமல் இருந்து வருகின்றோம்.
அண்டை மாநிலமான கேரளம் அவர்கள் மக்களை அழைத்து சென்றுவிட்டனர். அதேபோன்று எங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு விமானங்கள் அனுப்பாத சூழலில் தமிழ்நாடு அரசு விமானம் தரை இறங்குவதற்கு அனுமதி மறுப்பதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து திமுக தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றது. பல நாடுகளில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை அழைத்து வருவதற்கு 60 நாட்களில் வெறும் ஆறு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.