தனிமையில் இருந்ததைப் பார்த்த சிறுவனைப் பாட்டிலால் குத்திக்கொலை செய்த ஜோடியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் சுமதி தம்பதியர். இந்த தம்பதியருக்கு விக்னேஷ் (9) மற்றும் பவனேஷ்(8) என 2 மகன்கள் இருக்கின்றனர்.. இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றனர்.. சம்பவத்தன்று இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளனர்..
அப்போது வீட்டில் இருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பெற்றோர் பதறிபோய் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர்.. ஆனாலும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனைத்தொடர்ந்து மகன் காணாமல் போய் விட்டான் என பெற்றோர் ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், போலீசாரும் சிறுவனை பல இடங்களில் தேடிவந்தனர்..
இந்த நிலையில் தான் நேற்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளத்துப் பகுதிக்குச் சென்ற ஒருவர், அங்கு வயிறு, கழுத்து பகுதிகளில் பலத்த காயங்களோடு ரத்தம் வெளியேறி சிறுவன் ஒருவன் சடலமாக கிடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை பார்த்ததும், அச்சிறுவன் காணாமல் போன பவனேஷ் என்பதையும், அவனை யாரோ குத்திக்கொலை செய்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அஜித் என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து, விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சிறுவனை நான் தான் கொலைசெய்தேன் என ஒப்புக்கொண்டான் அஜித்.. ஆம், கடந்த வியாழன் கிழமை அன்று அவரும், அவருடைய லவ்வரான 17 வயது சிறுமியும் புத்தூர்பள்ளபாளையம் குளத்து பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர்.. அதனை அந்த சிறுவன் பவனேஷ் பார்த்து விட்டான்.. இதனை ஊர் பெரியவர்களிடம் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிறுவனைப் பாட்டிலால் குத்திக் கொன்று விட்டோம் என்றும், பின்னர் பல்லகவுண்டன்பாளையம் குளத்தில் போட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்..
இதையடுத்து இந்த கொடூர கொலையை செய்த அஜித்தையும், அவரது காதலியையும் கைதுசெய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் இருப்பதை பார்த்த சிறுவனை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதேசமயம் சிறுவனை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுவது கண்கலங்க வைக்கிறது..