பாசனத்திற்காக கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் துரைக்கண்ணு அதிகாரபூர்வ தகவலை வெளியிடுள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி நேற்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன்16ம் தேதி பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று திருவையாறு பகுதியில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைக்கண்ணு கல்லணையில் இருந்து வரும் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 100% நிறைவடைந்துவிட்டது.
மேட்டூர் அணையில் இருந்து திறைக்கப்பட்டுள்ள நீர் கடைமடை வரை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாய கடன், குறுவை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம், விதை நெல் ஆகியவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தகவல் அளித்துள்ளார். கல்லணையில் நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். கல்லணை மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.