சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.
ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்ததானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் முதலில் 4 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 6.8 மில்லியன் மக்கள் ரத்தத்தை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வலைதளங்களில் குழுக்கள், ரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட ரத்தம் உரிய முறையில் சேமிக்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும்.
மருத்துவமனைகளில் ரத்தம் பெறப்படும் முன்னர் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார். ஒருவர் உடலில் இருந்து 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடு செய்யப்பட்டு வருகின்றது. ஆண்கள் வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வோம், இன்னுயிர் காப்போம்.