முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தட்டிக்கேட்க, தாமோதரன் தரப்பினருக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென தகராறு முற்றவே, சொந்த தம்பி என்றும் பாராமல், தனது மகன் மற்றும் பேரன்களை விட்டு தடியாலும், கல்லாலும் கிருஷ்ணனை தாக்க வைத்துள்ளார்.இதையடுத்து அதனை தடுக்க வந்த கிருஷ்ணனின் மனைவி சின்னம்மா என்பவரையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓட, உயிருக்கு ஆபத்து ஆபத்தான நிலையில் இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழக்க, சின்னம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரரின் அண்ணனான தாமோதரன் அவருடைய மகன்களான முருகன், காந்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதே கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தாமோதரனின் பேரனான மோகன் ராஜ், சரன் ராஜ் மற்றும் 19 வயது இளைஞர் ஒருவர் ஆகிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.