சென்னையில் இன்று ஒரேநாளில் 63 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று 40 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 16 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேர், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் 4 பேர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர், அயனாவரம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் என மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 12 பேர், செவிலியர் ஒருவருக்கு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய நிலையில், முன்களப்பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் தொற்று மிகவும் அதிகமாக பரவிவருகிறது. இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமத்தூரர் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.