8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக குருவை சாகுபடிக்காக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன என கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்டா பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,அணையில் தொடர்ந்து 305 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் நீர் இருப்பு உள்ளது.
உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் அளித்துள்ளார். கடைமடை வரை மேட்டூர் அணையின் நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் 80% நிறைவடைந்துள்ளதாகவும், குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்காக ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டில் பணி நிறைவு பெற்றது. தஞ்சை, புதுக்கோட்டை, கல்லணை கால்வாயை சீரமைக்க ரூ.298 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.