ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை ஜி.வெங்கடேஷ். அவரது தாய் ஏ.ஆர்.ரெஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் தாய் மாமன் முறை. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார்.
அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய முதல் திரைப்படம் வெயில். அந்தப் படத்தில் இவர் இசையமைத்த வெயிலோடு உறவாடி என்ற பாடலினால் படம் ஹிட்டானது எனக் கூறுவர். வருடத்திற்கு 3 படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் கடைசியாக இசையமைத்த திரைப்படம் அசுரன் என்பது அனைவரும் அறிந்ததே.
இளைய தளபதி விஜய்யும், தல அஜீத்தும் செய்யாத செயலை ஜி.வி.பிரகாஷ் செய்துள்ளார். அது என்னவென்றால் இதுவரை விஜய், அஜித் என இருவரும் வருடத்திற்கு அதிகபட்சம் மூன்று படங்கள் நடித்துள்ளனர். ஆனால் ஜி.வி.பிரகாஷ் 2019 ஆம் வருடத்தில் 7 படத்திற்கு மேல் நடித்து அதில் 6 படம் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர்கள் அனைவரும் படங்களில் நடிப்பதில்லை சிலர் சிறிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் தங்களது முகங்களை காட்டி விட்டு சென்று விடுவர். ஆனால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் இருந்து கொண்டு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவரது வெற்றிப் படம் டார்லிங் என்றே அனைவரும் சொல்கின்றனர். டார்லிங் திரைப்படம் தமிழில் எடுப்பதற்கு முன்பே தெலுங்கில் வெளிவந்த படம். அதையே தமிழில் எடுத்தனர். ஆனால் தெலுங்கு படத்தின் இயக்குனர் தெலுங்கில் எடுத்த படத்தை விட ஜி.வி.பிரகாஷ் நடித்த தமிழ் படமே மிகவும் நன்றாக அமைந்துள்ளது என கூறியுள்ளார். இவ்வாறு சிறந்த நடிகராக ஜிவி பிரகாஷ் வலம் வர காரணம் அவரது எதார்த்தமான நடிப்புதான்.
அவர் நடிக்கும் படங்களில் நடிப்பை வெளிப்படுத்தாமல் ஒரு இளைஞன் எவ்வாறு நடந்து கொள்வானோ அவ்வாறே நடந்து கொள்வார். ஒரு படத்திற்கு இசையும் அமைத்து விட்டு அதே படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க ஜி.வி.பிரகாஷால் மட்டுமே முடியும் என்றும் சொல்லலாம். சிறுவனாக பாடல் பாடி திரைத்துறையில் அறிமுகமாகி தனது கடின முயற்சியால் இசையமைப்பாளராக மாறி தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.