திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை நடிகையுடன் தியாகராஜன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்ததாகத் தெரிகிறது. மேலும் நடிகையிடமிருந்து அவர் பணம், நகை உள்ளிட்டவற்றையும் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், தான் தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர், வழக்கத்தை விட காதலியுடன் பேசுவதை சற்று நிறுத்தியுள்ளார். இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் காதலி (துணை நடிகை) தன்னைவிட ஒரு வயது மூத்தவர் என்பதால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி தியாகராஜன் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த துணை நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் போலீசார் தியாகராஜன் மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.. அதனைத்தொடர்ந்து போலீசார் தியாகராஜனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.