ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும் , அனுமதி அளிக்கக்கூடாது என மண்டப உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கக் கூடிய திருமண மண்டபம் ஒன்றில், திருமண ஜோடி ஒன்றுக்கு காலை 9 மணி முதல் 10.30 மணி அளவில் மேளதாளம் முழங்க சாப்பாடு உடன் திருமணம் நடத்த வீட்டார்கள் முடிவு செய்தனர். அதன்படி உறவினர்கள் , நண்பர்கள், குடும்பத்தார்கள் என 100க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட , சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திருமணத்தை தடுத்து நிறுத்தி,
அனைவருக்கும் பரிமாற இருந்த சாப்பாட்டை முதலில் வெளியே எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த நபர்கள் அனைவரையும் வெளியேற்றி மண்டபத்திற்கு பூட்டு போட்டு தடையை மீறி அனுமதி அளித்த திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து சுப காரியம் என்பதால் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு கடுமையான எச்சரிக்கை அளிக்கப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ஜோடிகளுக்கு அதே பகுதியில் இருக்கக்கூடிய விநாயகர் கோவிலில் மிக எளிய முறையில் 50 நபர்களுக்கு உட்பட்டவர்களை கொண்டு முக கவசம் அணிந்த படி, சமூக இடைவெளியுடன் திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.