Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ5,000-ரூ10,000 நிவாரண உதவி….. தகுதி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரசு வழங்கும் நிவாரண உதவியை பெறுவதற்கு கிராமிய கலைஞர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் கிராமிய கலைஞர்கள் அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் கிரன் குராலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தொன்மை வாய்ந்த கிராமியக் கலைகளை போற்றும் விதமாகவும் மேலும் அதனை வளர்க்கும் விதமாகவும் கிராமிய கலைஞர்களையும்  கலை குழுக்களையும் ஊக்குவிக்க அவர்கள் ஆடை, இசைக்கருவிகள் மற்றும் அணிகலன்களை வாங்க தனிப்பட்ட முறையில் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்தாயிரம் விதம் 500 பேருக்கும்,  10 ஆயிரம் வீதம் 100 கலை குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலமாக நிதிஉதவி கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமியக் கலைஞர்கள் இந்த நிதி உதவியை பெறுவதற்கு விண்ணப்பிக்க தனிப்பட்ட வயது வரம்பாக 31.3.2020 அன்றைய தேதியின் அடிப்படையில் 16 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படுவதோடு தபால் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற முடியும் எனவும், அதற்காக கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்கள் அவர்களின் முகவரியிட்ட உரையில் பத்து ரூபாய்க்கான தபால் தலை ஒட்டி இயல், இசை, நாடக மன்றத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி மாலை 5.45 மணிக்கு உள்ளாக

உறுப்பினர் செயலாளர்,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

31, பொன்னி,

பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,

சென்னை – 600 028.

என்ற முகவரிக்கு  சென்றடையும் படி அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமன்றி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்கள் நேரிலும் சென்று சமர்ப்பிக்கலாம் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |