கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட கூலூர் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டியானது கட்டப்பட்டது.. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. தற்போது அந்த பழைய நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழைய தொட்டியை உடனடியாக இடிக்கக் கோரியும், புதிய நீர்த்தேக்கத் தொட்டியை விரைவில் திறந்து வைக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருவாலங்காடு வட்டாட்சியர் அலுவலரிடம் இப்பகுதியிலிருக்கும் சமூக ஆர்வலர்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் இந்த தண்ணீர் தொட்டி அருகில் செல்லும்போது மிகவும் அச்சத்தோடு கடந்து செல்கின்றனர் .
இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் இந்த பழைய குடிநீர்தொட்டி கீழே சிறுவர்கள் விளையாட வாய்ப்பு இருக்கிறது.. ஆகவே உயிர் சேதம் ஏற்படும் முன்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் அனைவரும் கேட்டு கொண்டுள்ளனர்.