மதுகுடித்து விட்டு போதையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார்.
அப்போது கொணவட்டம் தேவி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தசமயம், கட்டுப்பாட்டை இழந்த ராஜியின் கார், தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. அப்போது ஏழுமலை என்பவரது வீட்டுக்கு அருகில் கார் தலைக்குப்புற உருண்டு விழுந்ததில் ராஜி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து பலியான ராஜியின் உடலை வேலூர் வடக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.