தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,46,628 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தளர்வுகள் வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே வரும் 8ம் தேதிக்கு பின்னர் வழிபாட்டு தளங்கள், மால்கள் உணவகங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலா தலங்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தொல்பொருள் ஆராய்ச்சிகள், தேசத்தின் கலாச்சாரத்தை பராமரிக்கும் சின்னங்கள் திறப்பு உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.