இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் பலமுறை வரம்பு மீறல் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையை தொடங்கி இருப்பதாக ஜூன் 3ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த நேற்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மால்டோ எனும் பகுதியில் இந்திய, சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.