பாலைவன வெட்டுக்கிளிகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது.
இதனிடையே கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என வேளாண் அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சையை சேர்ந்த சிவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வரும் வாய்ப்பு மிக குறைவு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்ததற்கான ஆதாரம் இல்லை, ஒரு ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தாலும் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மேலும் திருச்சியில் பூச்சியிய மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
பிற மாநில எல்லை மாவட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர், குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளால் பாதிப்பு உள்ளதாக என இந்த குழு கண்காணித்து வருவதாகவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.