Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மங்காத்தா சூதாட்டம் … ”ஷாக்”ஆகி கொந்தளிக்கிறாங்க … எச்சரித்த ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஷாக்:

கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை  என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள்.

நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி எழுப்பியதால், பழிவாங்கும் விதமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசியல் ரீதியாக அறிக்கையை விளக்கமாக கொடுத்திருப்பது ஆளுவோரைத் திருப்திப்படுத்த அதிகாரிகளும் அரசியல் மயமாகிவிட்ட அவலத்தை எடுத்துரைக்கிறது.

மங்காத்தா சூதாட்டம்:

மின் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், யூனிட்டை கழிக்காமல் வெவ்வேறான ”வீதப்பட்டியல்” ( Tariff Slab )  அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பல்வேறு தரப்பு மின் நுகர்வோர்களும் மிக்க கடுமையாக பாதிக்கப்பட்டு – அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்பது தெரிந்தும் மின் கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்து  பொறுத்துக்கொள்ள முடியாதது: இது மக்களிடம் நடத்தப்படும் மங்காத்தா சூதாட்டம்.

குழப்பங்கள் தீர….

முந்தைய மாதம் முன் மின்நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை இரண்டு மாத நுகர்வாக பிரிப்பது, வீத பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கியிருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

பொது மக்கள் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளை கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தொழிலே இல்லாத சூழலில்….

ஜவுளி,  பொருட்கள், தானியங்கி, மின்  பொருட்கள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தயாரிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கிக்கிடந்தன. தொழிலே இல்லாத போது எப்படி அவர்கள் எல்லாம் மின்கட்டணம் செலுத்துவார்கள் ?

நிவாரணம் வழங்கி, மனநிம்மதியை அளித்து, மீண்டும் தொழிலை துவங்க வைக்கலாம் என்ற அடிப்படையில் பொருளாதார ஊக்குவிப்பு பற்றியெல்லாம் கூட அதிமுக அரசுக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை.

வேலை வாய்ப்பிற்க்கும், தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பிறக்கும் மிக முக்கியப் பங்காற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், நுகர்வோரிடமிருந்தும் முன்மாத மாதக் மின்கட்டணத்தை வசூலிக்காமல் – முந்தைய மாதம் செலுத்திய அல்லது ரீடிங்கிற்கான கட்டணத்தை-  பேரிடர் நிவாரணமாக அறிவித்திட வேண்டும்: மேலும் 6 மாதங்களுக்காவது ”கொரோனா கால” மின் கட்டண சலுகை வழங்கி – தமிழகத்தில் வேளாண்மையும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என்று மு க ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |