ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் நாள்(இன்று) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியையும் அதன் இயற்கையையும் பாதுகாக்க தேவைப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும் அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு மனிதர்களை தள்ளியுள்ளது.
உலகம் தழுவிய அளவில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும் அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து சுற்றுச்சூழல் தொடர்பான உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூண்டும் நோக்கிலும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தில் நம் பூமியின் சுற்று சூழலை பாதுகாக்க நம்மால் இயன்ற செயல்களை செய்ய முயல்வோம்.