சென்னை தலைமைச்செயலகத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் அரசு பணிகளுக்காக சுமார் 50% பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை.
இதுவரை தலைமைச்செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதையடுத்து 50% பணியாளர்களை 33%ஆக குறைக்க வேண்டும் என தலைமைச்செயலக பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக முதல்வருக்கு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.