தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார்.
மேலும் தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 19 மருத்துவர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.