மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் பரவுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை முழுமையாக அமர்த்திக் கொள்ளலாம். கட்டுமான பொருட்களின் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக அனைத்து கால்வாய்களும் தூர்வார வேண்டும். குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருட்களுக்கு கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட வேண்டும் ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.