வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய சூழலில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 50% பேர் குணமடைந்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
மக்கள் வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை பிறப்பற்ற வேண்டும். நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியிடம் 5 முறை, மாவட்ட ஆட்சியர்களுடன் 6 முறையும், பேரிடர் மேலாண்மை குழுவிடம் 4 முறையும் ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.