தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு தேவையான தேர்வறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் முடிந்தபிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.