சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் ராயபுரத்தில் நோய் தொற்று குறைந்த அளவே கண்டறியப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் தான் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட மண்டலவாரியாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையில் ராயபுரத்தில் 1981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது 2,000-ஐ தாண்டியுள்ளது. தற்போது வரை ராயபுரத்தில் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 803 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக உள்ளது. சென்னையில் மிக நெருக்கமாக வீடுகள் இருப்பதாலும், மக்கள் அதிக அளவில் வசிப்பதாலும் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முககவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முகக்கவசங்களை அணிந்து சென்று சமூக இடைவெளியை தற்காத்து கொண்டால் மட்டுமே ராயபுரம் மணடலத்தில் நோய்தொற்று குறைய வாய்ப்பிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.