தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது.
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்களை அறியும் நவீன ரேடார் கருவி மூலம் அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அகழாய்வு பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வழக்கமான பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த இரண்டு இடங்களிலும் இன்று பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தன் மேற்பார்வையில், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் ஜே.பாஸ்கரன் தலைமையிலான குழுவினரும், சிவகளையில் அகழாய்வு இயக்குநர் எம்.பிரபாகரன் தலைமையிலான குழுவினரும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.