இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் என ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 80,000 படுக்கைகளுடன் 5,000 ரயில் பெட்டிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், அந்த பெட்டிகளில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தியுள்ளோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கோவிட் கவனிப்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுவரை சிறப்பு ரயில்கள் மூலம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 80% உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும், மே 1ம் தேதி முதல் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டன. அதேபோல, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் சானிடிசர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ரயில்வே அமைச்சகம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. 1.2 லட்சம் கவரல்கள் மற்றும் 1.4 லட்சம் லிட்டர் சானிடைசரை உற்பத்தி செய்துள்ளதாக ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.