Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 148 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,534 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,330 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியா 11 இடத்தில் உள்ளது. இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இத்தாலியை விட அதிகமானோர் இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் தற்போது ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 60,960 ஆக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி 6ம் இடத்தில் உள்ளது. அங்கு, இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 006 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை 32,486 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆக்ட்டிவ் வழக்குகளின் எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

Categories

Tech |