சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் 4 நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கியிருந்தார்.
அதில், முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதேபோல, முத்ரா – ஷிசு திட்டத்தில் சுமார் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், முத்ரா – ஷிசு திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை கடன் பெற முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கனவே 3 மாதம் கடன் தவணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் நடுத்தர வீட்டு கடன் மானிய திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதில்,தற்போது முத்ரா திட்டத்தின் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடனுதவி பெற ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.