Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு விவரம்

மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றும் காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள், ஊடகப்பணியாளர்கள், மருத்துவர்கள், வருவாய் அலுவலகர்கள் மற்றும் அரசு சாரா தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுருந்தார். இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்ததது.

வருவாய் நிர்வாக ஆணையர் அறிக்கை தாக்கல்

அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் தரப்பில் ஒரு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மார்ச் 19ம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மார்ச் 24ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, உடை வழங்க, மாதிரிகள் சேகரிக்க, பரிசோதனைக செய்ய ரூ.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏப்., 8ம் தேதி நகர பணியாளர்களுக்கு கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ. 15. 8 கோடியும், ஏப்., 14ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2,17,240 என்- 95 மாஸ்க்குகள், 2,80, 696 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு கஷாயம், ஜின்க் மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், கபசுரக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதிகள் முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகளை முன்களப் பணியாளர்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது குறித்து விரிவான பதில் மனுவை 27ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |