Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும், பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது.

அதில், ” பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம். ஹோட்டல்கள் மது பான கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம். இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்” போன்ற தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பேருந்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து வசதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிறபகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |