Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுயசார்பு திட்டம் : மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி …!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார்.

மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் நான்கு நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பாக இன்று அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. இந்த இடர்பாடான சூழலை நல்வாய்ப்பாக பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவே அரசின் இலக்காகும். மக்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து முக்கிய கவனம் அளிக்கப்படும். இன்று ஏழு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அவை வணிக மேம்பாடு, சுகாதாரம், மாநில அரசுகளின் நிதி, 100 நாள் வேலைவாய்ப்புத்திட்டம், கம்பெனி சட்டத்தில் மாற்றம், பொதுத்துறை நிறுவனக் கொள்கை மாற்றம், வர்த்தகத்துறை ஆகும்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.15 ஆயிரம் கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு. மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி ஒதுக்கீடு. ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை கருவிகளுக்காக ரூ.550 கோடி ஒதுக்கீடு. கரோனாக்குப்பின் அரசின் முன்னெடுப்பு காரணமாக 300 உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி தடைபடாமல் இருக்க ஸ்வயம் என்ற இணைய கல்வி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன. 100 நாள் ஊராக வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு(MANREGA) உடனடியாக ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் தங்கள் கிராமத்திற்கு திரும்பச் சென்ற லட்சக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

பொதுச் சுகாதாரக் கட்டமைபை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொற்றுகளை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும். நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

கல்வித்துறையில் ஆன்லையன் செயல்பாட்டை அதிகரிக்கும் விதமாக இ – வித்யா திட்டம் செயல்படுத்தப்படும். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும்.

பொருளாதார சிக்கலில் தவித்துவரும் நிறுவனங்களை காக்க திவால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு திவால் சட்ட நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படுகிறது. திவால் சட்ட நடவடிக்கைக்கான உச்ச வரம்புத் தொகை ஒரு கோடியாக உயர்த்தப்படுகிறது.

கம்பெனி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியான தவறுகளுக்கு கிரிமினல் சட்டம் இனி பொருந்தாது. கரோனா காலத்தில் ஏற்பட்ட கடன் சுமைகள் வாராக்கடனில் வரையறுக்கப்படாது.

பொதுத்துறை நிறுவனக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியத்துவம் தொடரும். முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்டத் துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் அவசியமாக இயக்கப்படும். மற்ற இடங்களில் தனியார் துறைக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மாநில அரசுகளின் நிதிநிலையை மத்திய அரசு தொடர்ச்சியாக கண்காணித்துவருகிறது. மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிதியிழப்பை சமாளிக்க அரசு தொடர்ச்சியாக நிதி வழங்கிவருகிறது

ஏப்ரல் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வரி நிலுவைத்தொகை ரூ. 46,038 கோடி வழங்கப்படுகிறது. பேரிடர் நிதியிலிருந்து ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வருவாய் பற்றாக்குறை மானியமாக சுமார் ரூ.12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது. மாநிலங்கள் தங்கள் ஜி.டி.பி தொகையில் கடன் பெறும் உச்சவரம்ப்பு 3% இருந்து 5%ஆக உயர்வு என்று தனது உரையை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டார்.

இதன் மொத்த மதிப்பு குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர், 

முதல் கட்ட அறிவிப்பு : ரூ. 5, 94, 550 கோடி

இரண்டாம் கட்ட அறிவிப்பு : ரூ. 3, 10, 000 கோடி

மூன்றாம் கட்ட அறிவிப்பு : ரூ. 1, 50, 000 கோடி

நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அறிவிப்பு : 48, 1000 கோடி

அனைத்தையும் சேர்த்து சுயசார்பு திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 20.97 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

Categories

Tech |