கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக நாடுகளில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவுக்கு 88,507 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 14 லட்சத்து 84 ஆயிரத்து 285 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அரும்பாடுபட்டு வருகின்றன. ஏற்கனவே, இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக தருவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்கிறோம்.கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. ஒன்றாக இணைந்து நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.