பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட உள்ளது.
மாநில அரசுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், மாநில அரசுகள் இதற்கு தகுதியான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண்பார்கள் என கூறியுள்ளார்.ஒருவருக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு போன்றவை வழங்கப்படும். இதன் மூலம் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும் என தகவல் அளித்துள்ளார். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும்,
அதாவது ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம். மார்ச் 2021 உள்ளாக இவற்றை நடைமுறைப்படுத்தி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துளளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி செய்து தரப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.