கொரோனாவால் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 15 நாளில் அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிறுவனகள் ஆகியவை மூடப்பட்டன. ஒரு வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த நடப்பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக 210 நாட்களுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனால் சுமார் 30 நாட்கள் பள்ளி வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஜூன் பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நடப்பாண்டு மற்றும் வரக்கூடிய கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக கல்வித்திறம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்றலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுமா?, அதனை எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்து ஆராய்வதற்கு ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு 15 நாட்களுக்குள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறையில் அறிக்கை பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.