வயல்வெளியில் இருந்து 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவள் தந்தையும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டனர்
போர்த்துக்கல் நாட்டின் பெனிச் நகரில் கடந்த 7 ஆம் தேதி ஒருவர் தனது 9 வயது மகளை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையின் ஒருபகுதியாக 600 காவலர்கள் மாயமான சிறுமியை தேட களமிறங்கினர்.
காவல்துறையினருடன் சாரணர் அமைப்பை சேர்ந்த சிறுவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் சுமார் 4,000 ஹெக்டேர் வயல்வெளியை மொத்தமாக சல்லடையிட்டு தேடினர்.
இந்த நிலையில் புதரால் மறைக்கப்பட்ட நிலையில் சிறுமி பொன்சேகாவின் சடலம் அந்த வயல்வெளியில் 10 ஆம் தேதி மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்த குழந்தையின் தந்தை மற்றும் வளர்ப்பு தாயாரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட அன்றே சிறுமி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அதே நாளில் வயல்வெளியில் மறைத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் வன்முறைக்கு பின்னரே சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக கூறிய காவல்துறையினர் சிறுமி எவ்வாறு இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்கின்றனர். தாயாருடன் வாழ்ந்து வந்த சிறுமி பொன்சேகா தற்போது ஊரடங்கு அமுலில் இருப்பதால், தந்தையுடனும் வளர்ப்பு தாயுடன் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.