வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடை அருகே இருக்கும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் 5 அடி நீளத்தில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பை காப்பாற்றும் நோக்கத்துடன் வலையிலிருந்து பாம்பை மீட்டுள்ளார். அப்பொழுது மீட்கப்பட்ட நல்ல பாம்பு ராஜசேகர் கையில் கடித்துவிட இதனால் விஷம் தலைக்கு ஏறி ராஜசேகர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்ததோடு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சிதம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜசேகர் மரணமடைந்தார். உயிருக்கு போராடிய பாம்பை காப்பாற்றி அதே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.