வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 17 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. இதை நிலையில், நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 2 சிறப்பு விமானங்கள் மூலம், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பக்ரைனின் மனாமாவிலிருந்து 25 குழந்தைகள் உள்பட 182 இந்தியர்கள் கேரளாவின் கொச்சி வந்திறங்கினர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிள்ளனர். மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 16 பேர் சிகிச்சையில் இருந்தனர். இன்று ஒருவர் குணமடைந்ததோடு, இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சையில் 17 பேர் உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.