விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.
இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷவாயு காரணமாக ஏராளமான கால்நடைகள் மரணம் அடைந்துள்ளன. மேலும், ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்து ஆய்வு நடத்தினார்.
மேலும், விஷவாயு காரணமாக உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நன்கொடை அறிவித்தார். ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு பிறகு இந்த ஆலை திறக்கப்பட்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்க ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், விஷவாயு காற்றில் கலந்தது தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், விஷவாயு கசிந்த ராசியான ஆலையை மூட வேண்டும் என மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.