மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மாநில மத்திய அரசு கடந்த மாதம் மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். இதனால் மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும். மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் இதுவரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் தீர்க்கமான கொள்கை என்றும் விவசாயிகளுக்கான மின்சார மானிய தொகையை வழங்கும் முறையை தமிழக அரசே தீர்மானிக்க வகை செய்ய வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் புதிய மின்சார திட்டம் ஏற்கனவே உள்ள மின்சார சட்டத்தின் வரம்புகளையும் குறைப்பதாக உள்ளதாகவும், மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நேரடியாக மானியம் செலுத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்தும். இது பொதுமக்களுக்கும், மாநில அரசின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.