கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா என வெளியான தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் காவலருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வெளியானதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பெண் முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு விளக்க அறிக்கை ஒன்று காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பாதித்த பெண் காவலர் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.
அவர், கிரீன்வேஸ் சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏப்.30 தேதி வரை இருந்தார். அதற்கு பிறகு அவர் பாதுகாப்பு பணியில் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பெண் காவலருக்கு கடந்த 3ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று – 6ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் ஓமத்தூரர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சுழற்சி முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெண் காவலர், காவலர் குடியிருப்பில் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, பெண் காவலர் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை” என விளக்கத்தை அளித்துள்ளது.