சென்னை வேளச்சேரியில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்ற வியாபாரிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்கி வந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த தள்ளுவண்டி வியாபாரிக்கும் கொரோனா பரவியுள்ளது.
இதனையடுத்து அந்த வியாபாரியின் குடும்பத்தினர் மற்றும் அவரிடம் காய்கறிகள் வாங்கியவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் சிறுவர்கள் என தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தள்ளுவண்டி வியாபாரி குடியிருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உட்பட அந்த பகுதி தெரு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் திருத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆணையர் அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.