பார்வதி தேவி வரைந்த அழகான குழந்தையின் படத்திற்கு தனது மூச்சுக் காற்றினால் உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவ்வாறு பிறந்தவர் தான் சித்திரகுப்தன். அவர் பிறந்த ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்றுதான் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகின்றது. எமதர்மர் சித்திரகுப்தனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் கணக்குப் பிள்ளையாக எமலோகத்தில் பதவியேற்றார்.
அவர் எழுதும் கணக்கின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப் பெற்று விமர்சனம் கிடைத்த நாளே சித்ரா பௌர்ணமி என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் பழங்காலந்தொட்டு தமிழர்களிடையே சித்ரா பவுர்ணமி கொண்டாட்டங்கள் மனிதர்களின் மன பாரத்தை குறைக்கும் விழாவாகவும், குடும்ப உறவை பலமாக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுடன் விளையாட அவகாசம் இல்லாமல் மனைவியுடன் பேச நேரமில்லாமல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாலும் மொபைலுக்கு வாழ்க்கையை அடக்கிக் கொள்கின்றோம்.. ஆனால் நமது பண்டைய தமிழர்கள் உறவுகளை வளர்ப்பதற்காக விழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர் அவ்வாறு உறவினர்களுடனும் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழும் நாள் தான் சித்ரா பௌர்ணமி. பண்டைய தமிழர்களின் காதலர் தினமாக இருந்தது சித்ராபவுர்ணமி.
முழுநிலா நாளில் நதிக்கரையில் ஒன்றுகூடி மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள், கவலைகள், ஆசைகள், கனவுகள் போன்றவற்றை பிரியமாணவர்களுடன் பகிர்ந்து மன சுமையை இறக்கி வைத்து ஓடும் ஆற்றில் அன்பை கலந்த அந்த நிகழ்வை முழுவதுமாக மறந்துவிட்டான் ஆண்ட்ராய்டு தமிழன். 50 வருட வாழ்க்கை வாழ்ந்த முதிய தம்பதிகள், நேற்று திருமணமான இளம் தம்பதிகள், காதலை பரிமாறிக் கொண்டிருக்கும் காதல் ஜோடிகள், காதலை பரிமாற துடிக்கும் இளைஞர்கள் என அத்தனை மக்களுக்கும் சித்ரா பௌர்ணமியே காதலர் தினம்.