தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே அடுத்து வரும் 2 தினங்களுக்கு பொதுமக்கள் காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுரை வழங்கியுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை முற்பகல் வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.