சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களை தடுக்க தேனி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேனியில் கடந்த மாதம் 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சொந்த ஊரான தேனிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
எனவே தேனி மாவட்ட எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 நேரம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை – தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முறையான அனுமதி இருந்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் நுழைய வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முறையான அனுமதி இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அனுமதிக்கப்படும் வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, வாகனத்தில் உள்ளவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.