10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மே 17ம் தேதி வரை 3ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 12ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்துள்ளது.
மேலும் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற குழப்பங்களும் மாணவர்கள் மத்தியில் இருந்தன. இதனிடையே 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. இதனை தொடந்து 10வகுப்பு தேர்வு ரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று தேர்வுத்துறை சார்பில் ஒரு தகவல் வெளியானது. அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.