இங்கிலாந்தின் நார்விச் நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பட்டப்பகலில் அச்சுறுத்தும் கருப்பு நிற கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் நார்விச் (Norwich) நகரின் கெல்ஸ்டன் பகுதியில் இருக்கும் தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே ஒரு விசித்திர மர்ம மனிதன் பொது மக்கள் கண்களில் தென்படுகிறான். ஆம், அவன் தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்து கொண்டு நீண்ட கருப்பு நிற உடையுடன் தொப்பி, பூட்சுடன் நடமாடி வருகிறான்..
ஏற்கனவே, கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வீடுகளுக்குள்ளேயே வாரக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் நார்விச் நகர மக்கள் இதனை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த மர்ம மனிதன் நடந்து செல்லும் போது ‘ஜேட்’ என்ற பெண் படமெடுத்து சமூகவலைத் தளங்களிலும் பகிர்ந்துள்ளார். அந்த மனிதன் அணிந்திருக்கும் உடை 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவிய காலகட்டத்தின் போது மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அணிந்த உடை, தொப்பி, பூட்ஸ், பறவையின் கூம்பு முக கவசம் போல இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மனிதரை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ‘ஜேட்’ கூறுகையில், “ஏற்கனவே எங்கள் பகுதியில் இருக்கும் எல்லா குழந்தைகளும் முக கவசம் அணிந்திருப்பதை கண்டாலே பயந்து போய் நடு நடுங்கி கொண்டிருக்கின்றன. எனது தாயாருக்கும் முக கவச ‘போபியா’ (அச்சம்) இருக்கிறது.
இந்த மனிதரைப் பார்த்தால் அவர்கள் இன்னும் பயப்படுகிறார்கள். அவர் எங்கிருந்து தான் வருகிறார், எங்கே தான் போகிறார்? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. மேலும் அந்த மனிதர் பட்டப்பகலில் கடும் வெயில் கொளுத்தும் நேரத்தில் இதுபோன்ற நீண்ட உடையை ஏன் அணிந்து நடமாட வேண்டும்? இது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் செயலாகும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.. இதைத்தொடர்ந்து நார்விச் போலீசார் மக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வரும் அந்த மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை அந்த மர்ம மனிதன் அப்பகுதியில் எந்த ஒரு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. இருப்பினும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றி திரிவதால் போலீசார் அவரை தேடிப்பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த மர்ம மனிதர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தன்னுடைய பாதுகாப்பிற்காக இப்படி உடை அணிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எப்படி இருந்தாலும் இது பொன்று ஒருவர் கருப்பு உடையில் நடந்து சென்றால் பயம் இருக்கத்தானே செய்யும்..