பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்த 71 ஆயிரதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தாயகம் திரும்புவதற்கு அமெரிக்க அரசு வழி செய்தது
சீனவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலக அளவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் உலக அளவில் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள அமெரிக்கர்களை தாய் நாட்டிற்கு அழைத்து கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் இதற்கு முன்னோடியாக வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப விரும்பும் மக்களுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறுகையில் “கடந்த ஜனவரி 29 முதல் 127 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 750 விமானங்களில் 71,538 அமெரிக்கர்கள் தாய்நாடு வந்துள்ளனர்” என கூறியுள்ளார். தூதரக விவரங்களுக்கான முதன்மை துணை உதவி செயலாளர் இயன் பிரவுன்லீ கூறுகையில் “மத்திய ஆசியா, தெற்கு ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் இருந்து அதிலும் குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளில் இருந்து அமெரிக்கா திரும்புவதற்கு உதவி கேட்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.
அமெரிக்க செய்த இந்த சிறப்பு ஏற்பாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். நாடு திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த பட்டும் மற்றவர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்த படுவார்கள் என அமெரிக்க அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.